இங்கிலாந்தை பந்தாடிய இந்திய மகளிர் அணி… 17 ஆண்டுகளாக தோல்வியே இல்லை… டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்த புதிய சரித்திரம்..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 2:46 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, விளையாடிய இந்திய அணி முதல் நாளில் சுமார் 400 ரன்னுக்கு மேல் குவித்தது. இதன்மூலம், 88 ஆண்டுகளுக்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் அன்று ஒரே அணி 400 ரன்களுக்கு மேல் ரன் குவித்தது பெரும் வரலாற்று சாதனை ஆகும். இறுதியில் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் சேர்த்தது. ஷூபா சதீஷ் (69), ரோட்ரீக்ஸ் (68), யாஷிகா பாட்டியா (66), தீப்தி ஷர்மா (67) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, 136 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீப்தி ஷர்மா 5 விக்கெட்டும், ரானா 2 விக்கெட்டும், பூஜா வஸ்திரேகர், ரேணுகா சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 479 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

மெகா இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து திணறியது. இறுதியில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

அதோடு, ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச (347) ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய படைத்துள்ளது.

Views: - 495

0

0