கேப்டனாக விராட் கோலியின் சிந்தனை இவரைப் போலவே உள்ளது: சஞ்சய் மஞ்ரேக்கர்!

8 February 2021, 9:56 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடுகள் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவ் ரிச்சர்ட்ஸ் போல இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. ஆனால் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் கோலி தலைமையிலான இந்திய அணி, 241 ரன்கள் என்ற மெகா முன்னிலையை இங்கிலாந்து அணிக்கு அளித்தது. இதனால் போட்டி இந்திய அணியின் கையை விட்டு நழுவிச் சென்றது என்றே பலரும் கருதினர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது ரசிகர்களுக்கு புது நம்பிக்கை அளித்தது.

இதன் மூலம் இந்திய அணி தற்போது வெற்றி பெற 420 ரன்கள் என்ற சூழ்நிலை உள்ளது. இதில் துவக்க வீரர் ரோகித் சர்மா மட்டும் வெளியேற இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, ரிஷப் பண்ட், சுப்மான் கில் உள்ளிட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிக்கு 381 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை 9 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இதனால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறவும் அல்லது இங்கிலாந்து வெற்றி பெறவும் அல்லது போட்டி டிராவை நோக்கிச் செல்லும் என மூன்று விதமான முடிவுகளுக்குச் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை கைப்பற்றியது முதல் புது உற்சாகம் அடைந்தது. இதற்கிடையில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை நம்பி அவருக்கு முதல் ஓவர் அளித்த கேப்டன் கோலியின் செயல்பாடு முன்னாள் கேப்டனான விவியன் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்தும் விதமாக உள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஞ்ரேக்கர் கூறுகையில், “முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய உடன் விராட் கோலியின் வெளிப்பாட்டைப் பார்க்கும்போது ஒட்டு மொத்த இந்திய அணியின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. விராட் கோலியின் கேப்டன் பொறுப்பை பற்றி விமர்சனம் செய்கின்றனர். ஆனால் கோலியின் இந்த அணுகுமுறை முன்னாள் ஜாம்பவான் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. அவர் எப்போதும் ஒரு உத்வேகத்துடன் தன்னம்பிக்கையுடனும் களத்தில் செயல்படுவார். இப்படி கேப்டன் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படும் பொழுது, அந்த போட்டியின் முடிவையே மாற்றும் சூழல் ஏற்படும் என்பது விவியன் ரிச்சர்ட்ஸ் எண்ணமாக இருந்தது. இதை தற்போது விராட் கோலியிடம் பார்க்க முடிகிறது” என்றார்.

Views: - 0

0

0