1987ல் பிறந்த கேப்டனுக்கே உலகக்கோப்பை பட்டம்.. கடந்த முறை சரியாக கணித்த விஞ்ஞான ஜோதிடர் கணிப்பு ; யார் அந்த கேப்டன்…?

Author: Babu Lakshmanan
5 October 2023, 4:06 pm
Quick Share

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதனை வெல்லப்போவது யார் என்பது குறித்து விஞ்ஞான ஜோதிடரின் கணிப்பு தற்போது வைரலாகி வருகிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 4வது முறையாக இந்தியாவில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் வரும் நவம்பர் 19ம் தேதி வரை 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அக்.,14ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.

2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த முறையும் இந்திய அணியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணி குறித்து பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

இவர் ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்து பெயர் பெற்றுள்ளார். அதேபோல, 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களின் சாம்பியன்களையும் சரியாக சொல்லி, மக்களின் கவனத்தை பெற்றார்.

2018 கால்பந்து உலகக்கோப்பையின் போது 1986ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கணித்தார். அதன்படி, 1986ல் பிறந்த ஹூயுகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. அதேபோல, 2022 கால்பந்து உலகக்கோப்பையின் சாம்பியனையும், பிறந்த ஆண்டை வைத்து கணித்தார்.

குறிப்பாக, 2019ம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பையை 1986ல் பிறந்த கேப்டன் தான் வெல்வால் என்று அவர் கணித்தபடியே, அதே ஆண்டில் பிறந்த கேப்டன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது.

தற்போது, 2023ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஸ்வாரசியமான விஷயத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த உலகக்கோப்பையை 1987ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

அவரது இந்தக் கணிப்பின்படி பார்த்தால், தற்போது விளையாடும் 10 அணிகளில் இருவரும் மட்டுமே 1987ல் பிறந்துள்ளனர். வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987 ஆம் ஆண்டு மார்ச் 24ம் தேதியும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 1987ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி பிறந்துள்ளார்.

இதன்மூலம், இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 401

0

0