மெஜிஷியனாக மாறிய மெஸ்ஸி… அர்ஜென்டினா ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா ; மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா..?

Author: Babu Lakshmanan
19 December 2022, 9:41 am
Quick Share

ஓய்வை அறிவித்திருந்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இதில் அர்ஜென்டினா முதல் அணியாக, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பை தொடரோடு சர்வதேச போட்டிகளில் விளையாட்டுக்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்தின. மெஸ்ஸியின் கடைசி போட்டி என்பதாலும், 18 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாலும், இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. 35 வயதிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முன் நின்று செய்த மேஜிக், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

உலகக்கோப்பையை வென்ற 3வது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- இந்த ஒரு தருணத்திற்காக வாழ்நாள் முழுக்க ஏங்கி இருக்கிறேன். ஆனால் கடவுள் ஒருநாள் உலகக்கோப்பை என்னும் பரிசை எனக்கு வழங்குவார் என்று தெரியும். இந்த உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் போது, இது எனது தொடர் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. இந்த கோப்பை என் கையில் ஏந்த கொஞ்சம் அதிக காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

உலகக்கோப்பையை வெல்வதற்காக ஏராளமான கஷ்டங்களை சந்தித்தோம். ஆனால் அனைத்து கஷ்டங்களையும் கடந்து வெற்றி பெற்றுள்ளோம். அர்ஜென்டினா சென்று மக்களுடன் கொண்டாட வேண்டும். உடனடியாக தேசிய அணியில் இருந்து ஓய்வை அறிவிக்க போவதில்லை. சாம்பியன் பட்டத்துடன் மீண்டும் அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து சில தொடர்கள் விளையாட வேண்டும், என்று தெரிவித்தார்.

பிரான்ஸுக்கு எதிரான ஆட்டம்தான் தனது கடைசி ஆட்டம் என அதிர்ச்சி கொடுத்த மெஸ்ஸி, உலகக்கோப்பையை வென்ற பூரிப்பில் தனது முடிவை மாற்றியிருப்பது ரசிகர்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 476

0

0