தொடரும் சோழர்களின் வசூல் வேட்டை… ‘பொன்னியின் செல்வன்’ ஹவுஸ்புல்..! தியேட்டர் கிடைக்காததால் உதயநிதி எடுத்த முடிவு..!

Author: Vignesh
3 October 2022, 4:00 pm
udhayanidhi stalin updatenews360
Quick Share

சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா நடிப்பில் உருவாகி உள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், சரத்குமார், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். அதன்படி இப்படத்தின் முதல்பாகம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

வெளியானது முதல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் ரூ.230 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை வருவதால், இந்த வாரமும் இப்படத்திற்கு மவுசு குறையாமல் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஒரு வாரத்திற்கு இப்படம் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.

அதேபோல் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீசான தனுஷின் நானே வருவேன் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், அப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களையும் பொன்னியின் செல்வன் ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் வருகிற அக்டோபர் 7ந் தேதி ரிலீசாக இருந்த காஃபி வித் காதல் திரைப்படம் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி வருவதன் காரணமாகவும், தியேட்டர்கள் பற்றாக்குறை காரணமாகவும் காஃபி வித் காதல் படத்தை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம். இதேபோல் அப்படத்துடன் ரிலீசாக இருந்த அருண் விஜய்யின் பார்டர், சிவா நடித்த காசேதான் கடவுளடா, அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Views: - 337

0

0