இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்கள் தவிப்பு ; தமிழக அரசு கட்டிய அடுக்குமாடி குடியிருப்போருக்கு நேர்ந்த அவலம்..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 8:49 am
Quick Share

காஞ்சிபுரம் ; 2112 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய தமிழக அரசு குடியிருப்பு வாசிகளுக்கு சுடுகாடு அமைக்காததால், விபத்தில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் 3 நாட்களாக தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றின் கரையோரம் குடியிருந்த சுமார் 700 வீடுகள் அகற்றப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கு கீழ்கதீர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தலா 1.50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது .

kanjipuram death - updatenews360

மேலும், வீடுகள் இல்லாதவர்களுக்கும் 1.50 லட்சம் ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறி உள்ளார்கள். இந்த வளாகத்தின் 8வது பிளாக்கில் வசிப்பவர் குமார். தச்சு வேலை செய்யும் குமார், தன் மனைவி தேவி(40), மகள் துர்கா(19), மகன் பரத்(18) ஆகியோர்களுடன் வசித்து வருகிறார்.

குமார் கடந்த 5 ஆம் தேதி அன்று அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 5 நபருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் இவருடன் மது அருந்திய நபர் ஒருவர் டாட்டா ஏஸ் வாகனத்தை எடுத்துவந்து குமார் மீது ஏற்றியதில் குமார் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.

kanjipuram death - updatenews360

அந்த மர்ம நபர் குமாருடைய கால்கள் மற்றும் இடுப்பின் மீதும் வண்டியை ஏற்றிவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அறிந்த குமாருடைய மனைவி தேவி மற்றும் மகன் பரத் ஆகியோர் குமாரை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனர். குமாருடைய இடுப்புக்கு கீழே அசைவு இல்லாத காரணத்தினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குமார் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், 13ம் தேதி சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். குமாரின் சடலத்தை கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் புதைக்க இயலாமல் மூன்று நாட்களாக குமாரின் சடலத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே வாங்காமல் அந்த குடும்பத்தினர் தவித்து வந்தனர்.

kanjipuram death - updatenews360

கீழ்கதீர்பூர் பகுதியில் இரண்டு சுடுகாடுகள் இருந்தும் குமாரின் சடலத்தை அங்கு புதைக்க இரு பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களிலும் சடலத்தை புதைக்க இடமில்லாத அவல நிலை பரவியது.

2112 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பு வளாகத்தில் சுடுகாடு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் சடலத்தை எங்கே புதைப்பது என்ற கவலையில் குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்தனர் . அதனாலையே குமாரின் சடலத்தை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கொண்டுவர தயங்கி தயங்கி இருந்தனர்.

ஒரு வழியாக இவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகம் குமாரின் சடலத்தை தாயாரம்மன் குளம் அருகே உள்ள மின் மயானத்தில் புதைக்க அனுமதி அளித்தது. அதன் பெயரில் குமாரின் சடலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வந்து சடங்குகள் செய்யப்பட்டு சவ ஊர்தி வாகனம் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாயார் அம்மன் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது .

kanjipuram death - updatenews360

அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் கூறும் பொழுது, நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி நதிக்கரையோரம் சொந்தமாக வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தோம்.

ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காமல் வேகவதி நதியோரம் இருந்த வீடுகளை இடித்து தள்ளிவிட்டு, தலா ஒரு நபருக்கு 1.50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு இந்த குடியிருப்பு பகுதியில் குடியேற அனுமதித்தனர்.

இந்த குடியிருப்பில் சமுதாயக்கூடம், கால்வாய் வசதி, கழிவு நீர் அகளறம் அகற்றிடுஎந்தவிதமான அடிப்படை வசதிகளையும் திமுக அரசாங்கம் செய்து கொடுக்காமல் எங்களை ஏமாற்றி விட்டது. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சுடுகாடு என்பது மிக மிக அவசியமானது. அதைக் கூட இந்த அரசாங்கம் செய்யாமல் கேலிக்கூத்தாக செயல்பட்டு வருகிறது, என வேதனையுடன் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் இந்த போக்கை கடைபிடிப்பது மிகுந்த அவமானத்துக்கு உரியது. மக்கள் இந்த குடியிருப்புகளில் குடியிருப்பதற்கு முன்னதாகவே அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து விட்டோம் என திமுகவினர் மார்தட்டி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடனடியாக இந்த பகுதியில் மின் மயானம் அமைத்து தர வேண்டும் அப்படி இல்லாவிடில் ஏற்கனவே குடியேறியுள்ள மக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம் என உறுதியுடன் தெரிவித்தனர்.

குமாரின் சடலத்தை புதைக்க இடமில்லாமல் அவதிப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாமல் எப்படி மக்களுக்கு வீடுகளை ஒதுக்கியது என்ற கேள்வியும், துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பிரச்சனைகள் அங்க காணப்படுகின்றது என தெரிந்து அதை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

Views: - 348

0

0