எந்த திட்டத்தையும் நிறைவேற்றல… மதுரை நூலகம் கட்டுனதே இதுக்காகத் தான் ; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு..!

Author: Babu Lakshmanan
13 July 2023, 4:52 pm
Quick Share

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓராண்டு செயல்பாட்டை பொறுத்தே கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியதாவது ;- திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை பிரச்சனை ஆகியவற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்தவும் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர் ஆட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

மாநில அரசு மதுரை மாநகராட்சிக்கு கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும். அனைத்து மாநகராட்சியை விட மதுரைக்கு நிதி ஒத்துக்கீடு செய்தால்தான் மழை கால தொடங்குவதற்கு முன்பாக சாலை, பாதாளச் சாக்கடை பணிகளை நிறைவு செய்ய முடியும். சுதந்திர போராட்ட வீரர்களான அழகு முத்துக்கோன், முத்திரையர் சிலைகளை அமைப்பதற்கு தடையில்லா சான்றை மாநகராட்சி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே, திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை மறுநாள் தந்தை பெயரில் கட்டப்பட்ட நூலகம் ஒன்றை திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம். முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று 210 கோடி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நூலகத் திறப்பு விழாவிற்கான இடம் நூலகத்திலேயே இருக்கும் போது ஏன் காவலர் ஆயுதப்படை மைதானத்தை தேர்வு செய்தார்கள்? நாங்கள் ஒரு முறை எம்.ஜி.ஆர் மைதானத்தில் அதிமுக விழா நடத்தி 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தந்தையின் பெயரை நிலை நிறுத்துவதற்காக இதனை கொண்டு வந்திருக்கிறார். அதற்கு பதிலாக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். 210 கோடிக்கு இந்த திட்டம் அவசியமா!

மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது. விண்ணப்பக் கட்டணம் என பத்து ரூபாய் நிர்ணயிக்கிறார்கள். 2 கோடி பேர் இதற்கு விண்ணப்பித்தால் 30 கோடி ரூபாய் என இதன் மூலம் அரசு வருவாய் ஈட்ட இருக்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருக்கும். பல்வேறு நிதிகளை விரட்டி நிர்வாக திறனுடன் நிர்வாகத்தை செயல்படுத்தினோம். தற்போது இருக்கும் மேயரை குற்றம்சாட்டவில்லை. நிதியை பெற முயலவேண்டுமன கூறுகிறேன்.

மதுரை வரும் முதல்வர் மதுரைக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கடிதத்தை பொதுச் செயலாளரிடம் வழங்கினால், கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் செயல்பாடுகளை ஓராண்டு கண்காணித்த பிறகு கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வார். தொண்டர் முதல் தலைவர்கள் வரை அனைவரையும் சமமாக நடத்தும் பண்பை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி, என கூறினார்.

Views: - 207

0

0