ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு சிக்கல்… தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் மனு…!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 8:56 am
Quick Share

அதிமுகவின் பெயரை பயன்படுத்தி, அமமுக கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முயலும் ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று தூத்துக்குடி அதிமுகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி ஓ. பன்னீர்செல்வம் அணியினர் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளம்பரம் செய்துள்ளனர். அதில், தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் உடன் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பங்கேற்கிறார் என்றும், தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு விவிடி சிக்னல் அருகே நடந்திடும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதனை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் பெயரையோ, கட்சிக் கொடியையோ, கட்சியின் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ். சேகர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், செண்பகராஜ், வைகுந் சங்கர், ஆதீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Views: - 219

0

0