கொரோனா வார்டில் பணியாற்றி 5 மாதம் கழித்து வீட்டுக்கு திரும்பிய செவிலியர் : உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்!!!!

5 September 2020, 5:11 pm
Maduria Nurse - Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா காரணமாக மருத்துவமனையில் 5 மாதமாக பணியாற்றி வீட்டுக்கு திரும்பிய செவிலியருக்கு மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 வருடங்களாக செவிலியராக பணியாற்றி வரும் செவிலியர் மீனா மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார், மதுரையில் கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை 5 மாதமாக கொரோனா சிறப்பு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய செவிலியர் மீனா இன்று தனது வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டிற்கு வந்த செவிலியர் மீனாவுக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றி சேவை செய்த செவிலியர் மீனாவின் சேவையை பாராட்டி இத்தகைய வரவேற்பு கொடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றிய போது உண்டான மன அழுத்தம் எங்கள் பகுதி மக்கள் கொடுத்த வரவேற்பால் தற்போது நீங்கியுள்ளது, மிகவும் மன மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என செவிலியர் மீனா தெரிவித்தார்.

கொரோனாவுக்காக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடல்களை புதைக்க பல்வேறு சர்ச்சைகள் உண்டாகி வரும் சூழலில் கொரைனாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கு வரவேற்பு கொடுத்து உள்ளது இப்பகுதி மக்களின் மனித நேயத்தை பிரதிபலிப்பதாக அமைந்து உள்ளது.

Views: - 0

0

0