அடிப்படை அரசியல் அறிவுகூட இல்ல…. கிறிஸ்தவ அமைப்புகள் கைப்பாவையாக செயல்படும் விஜய் ; அர்ஜுன் சம்பத் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 9:56 am

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய அரசும் புலனாய்வு நிறுவனங்களும் மிக தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகரில் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். மேலும், இந்தக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது :- தமிழகத்தில் நரேந்திர மோடியின் நல்லாட்சி வர வேண்டும். அதற்காக செங்கோல் வழிபாட்டோடு இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை துவங்கி இருக்கிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் முழுவதும் தன்னை பிரச்சாரம் மூலம் ‘இல்லம் தோறும் மோடியின் குடும்பம், உள்ளம் தோறும் தாமரை’ என்ற பிரச்சாரத்தை இந்து மக்கள் கட்சி நடத்துகிறது.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய அரசும் புலனாய்வு நிறுவனங்களும் மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தேச விரோதமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், குடியுரிமை சட்டம் குறித்து அவதூறு பிரச்சாரத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். எனவே, அவரை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துவிட்டு பின்னர் அதே சட்டத்தை தற்போது எதிர்த்து பேசுவது என்பது திராவிட கட்சிகள் மாறி மாறி பேசுவது என்பது அவர்களின் அரசியல் ஸ்திர தன்மை மற்றும் வாக்கு வங்கி அரசியலை காட்டுகிறது எனவும் அரசியல் உள் நோக்கத்தோடு இவர்கள் இந்த பிரசாரத்தை செய்கிறார்கள் இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பாஜகவிற்கு வாக்குகள் அதிகரிக்கும். தமிழகத்தில் போதை பொருளுக்கு எதிராக கருத்து தெரிவிக்காத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விஜய் கருத்து தெரிவிக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார். நடிகர் விஜயை கிறிஸ்தவ அமைப்புகள் கைப்பாவையாக வைத்துள்ளது.

இந்து சமய அறநிலைய துறை சார்பில் முருக பக்தர்களின் மாநாடு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்ததை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இந்து சமய மாநாடுகளை நடத்த வேண்டும்.

முருக பக்தர்கள் மாநாட்டில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முருகப் பெருமானை இழிவு படுத்தி பேசுகின்ற திராவிடர் கழகத்தை தடை செய்ய சொல்லி முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி ஆதரித்து பிரச்சாரம் செய்கிறோம், பாரதிய ஜனதா கட்சி 40 தொகுதியில் வெற்றி பெற பாடுபடுவோம். ஆனால் இந்து மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை, என்றார்.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!