தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலை… திமுகவின் திட்டமே இதுதான்… அர்ஜூன் சம்பத் பகீர் குற்றச்சாட்டு…!!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 5:00 pm
Quick Share

எல்லா இடங்களிலும் தமிழகத்தில் கலைஞர் சிலையை வைத்து, தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

கிடுகு பட இயக்குனர் வீர முருகனின் இயக்கத்தில் வெளிவரும் நாதுராம் கோட்சே திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா, மதுரை பாண்டி கோவில் அருகே தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கிடுகு திரைப்படத்தை தயாரித்து, பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலே, அதை youtubeல் வெளியிட்டு, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற அந்தப் படக் குழுவினர்க்குப் பாராட்டு விழா. கிடுகு திரைப்படத்தில் திராவிட இயக்கங்களின் முகத் திரையைக் கிழித்தார்கள். அவர்களின் அடுத்த தயாரிப்பான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

கிடுகு திரைப்படம் வெளியீட்டிற்கு எப்படி இந்து மக்கள் கட்சி துணை நின்றதோ, அது போல் நாதுராம் கோட்சே திரைப்படத்திற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்த திரைப்படத்தில் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்துக்கள் பாதிக்கப்படுவது குறித்து கருத்துகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏழு, எட்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும்.

இந்தப்படம் திமுக அரசின் அச்சுறுத்தலால் திரை அரங்குகளில் வெளியிடப்படாமல் OTT தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயரை வைப்பது கலைஞருக்கும், ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்த வளாகத்தில் தீரன் சத்தியமூர்த்தி சிலை கருணாநிதி காலடியில் இருப்பது போல் கருணாநிதிக்கு பெரிய சிலை வைத்து உள்ளார்கள்.

எல்லா இடத்திலும் கருணாநிதி சிலை, ஈவெரா சிலை இவற்றை எல்லாம் வைத்து, தமிழ்நாட்டில் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதற்கு, தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சி செய்கிறார்கள், என அர்ஜூன் சம்பத் கூறினார்.

Views: - 284

0

0