ஆயுத பூஜையை முன்னிட்டு பூ சந்தையில் குவிந்த பொதுமக்கள்… வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி… வியாபாரிகள் கவலை..!!!
Author: Babu Lakshmanan13 October 2021, 11:27 am
புதுக்கோட்டை : ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்களின் விலை வீழ்ச்சியடைந்ததால் பூ வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி கொத்தமங்கலம், கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோழிக்கொண்டை சம்பங்கி செவ்வந்திப்பூ, கனகாம்பரம், அரளி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மழை நன்கு பெய்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிக அளவு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய மலர்கள் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ சந்தையில் ஏலம் விடப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த மலர்களை கொண்டு வந்து ஏலம் விடுவார்கள். ஏலத்தில் புதுக்கோட்டை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மலர்களை ஏலம் எடுப்பார்கள்.
இந்நிலையில், நவராத்திரி விழாவின் முக்கிய நாளான ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், புதுக்கோட்டை பூ சந்தையில் பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. இதேபோன்று, பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவு ஏலத்தில் பங்கேற்று தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
பூ சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், பூக்களின் விளைச்சல் காரணமாக வரத்து அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. செவ்வந்தி பூ கிலோ 250 ரூபாயும், சம்பங்கி பூ 250 ரூபாயும், கோழிக்கொண்டை 30 ரூபாயும், கேந்தி பூ 200 ரூபாயும் என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், அரளி பூ கிலோ 500 ரூபாயும், மல்லிகை கிலோ ஆயிரம் ரூபாயும், முல்லைப்பூ 900 ரூபாயும் என விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி, முல்லை, ரோஜா ஆகிய பூக்களின் விலை மட்டும் அதிக அளவு உள்ளது. மீதமுள்ள பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
0
0