இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..? திராவிடம் பாடல் இசைக்கப்பட்டது ஏன்..? திமுகவுக்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 1:51 pm
Quick Share

ராமர் கோவில் பிரதிஷ்டையில் திமுக அரசு ஏன் இவ்வளவு இடையூறு செய்கிறது எனவும், திமுக அரசு ஒரு பாசிச அரசு எனவும் பாஜக விளையாட்டு பிரிவு மாநிலத்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று ராமர் கோவில் பிரதிஷ்டை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமர் கோவில் பிரதிஷ்டை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ராம பக்தர்கள், பாஜக நிர்வாகிகள் பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் கலந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக கோவில் பிரதிஷ்டை கண்டு களித்தனர்.

நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் ராமர் கோவில் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கையில், அவர் யார் என்றே தெரியாது எனவும், அவர் ஒரு கேவலமான அரசியலை மேற்கொள்கிறார் என்றும், அதை நிறுத்திவிட்டு அவர் தாயார் சொன்னதை கேட்டு நடக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் இந்துக்கள் தமிழகத்தில் வாழ வேண்டுமா? வேண்டாமா என்னும் நிலை உள்ளதாகவும், ராமர் கோவில் பிரதிஷ்டையில் திமுக அரசு ஏன் இவ்வளவு இடையூறு செய்வதாகவும், உலகமே ஒரு புறம் இருக்க, திமுக ஒரு புறம் நின்று உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக அரசு ஒரு பாசிச அரசு எனவும், தற்போது உதயநிதி தான் தமிழக முதல்வர் போன்று செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து, திமுக மாநாடு ஒரு டிஸ்கோ மாநாடு எனவும், இளைஞரணி மாநாட்டில் டிஸ்கோ டான்ஸ் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கேலோ இந்தியா விளையாட்டில் தமிழகத்தை தனியாக பிரித்து திராவிடம் எனவும் பாடல் இசைக்கப்பட்டது எதற்காக எனவும், கேலோ இந்தியா உங்கள் அப்பன் வீட்டு சொத்தா எனவும் அவர் கடுமையாக சாடினார்.

Views: - 209

0

0