‘உன் பவரை காமி’.. திமிறிய அரசுப் பேருந்து ஓட்டுநர்… பேருந்தை நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
14 February 2023, 6:12 pm
Quick Share

கடலூர் : சிதம்பரத்தில் பெண் ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை நிறுத்திய நபருடன் அரசுப் பேருந்து ஓட்டுநர் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிதம்பரத்திலிருந்து வெள்ளூர் கிராமத்திற்கு அரசு பேருந்து தடம் எண் 23ஏ நேற்று மாலை பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது, குறுக்கு ரோடு என்ற பகுதியில் அதங்குடி சிறுகழிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் தாய் நின்று கொண்டிருந்தபோது, பேருந்தின் ஓட்டுனர் நடராஜன் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுபாஷ் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதன் என்பவர் இளநாங்கூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்து நிறுத்தி உள்ளனர். அப்போது ஏன் பேருந்தை நிறுத்தாமல் சென்றீர்கள்…? என சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் பேருந்து ஓட்டுனர் நடராஜன் இடம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் நடராஜன், சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திக் கொண்டு, பேருந்தை எப்படி நீ நிறுத்தலாம் என கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்து சுபாஷ் புறப்பட முயற்சி செய்கிறார்.

ஆனால், சுபாஷை நிறுத்தி அடியாட்களை போல் எங்க செல்கிறாய் என மிரட்டும் பாணியில் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர், “எந்த துணிச்சலில் நீ வண்டியை மறைத்தாய். சாலையில் எவ்வளவு வாகனங்கள் நிற்கிறது பார்..?, இந்த இடத்தை விட்டு நீ செல்ல முடியாது. உன்னோட பவரை நீ காமி,” என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை சாலையில் நிறுத்தி தகராறு செய்தார். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், பேண்ட் சட்டையை கழட்டினால் நாங்களும் உங்களை மாதிரி தான் என கெத்து காண்பித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார், ஓட்டுநர் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ் மற்றும் உறவினர் ரங்கநாதன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று அரசு பேருந்தை சாலையில் நடுவே நிறுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Views: - 413

0

0