பணிநிரந்தரம் செய்யக்கோரி மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்கள் போராட்டம்… 1,000க்கும் மேற்பட்டோர் கைது..!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 6:48 pm
Quick Share

மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களின் பணிக்காலம் மார்ச் 31ம் தேதியுடன் முடியும் நிலையில், பணி நிரந்தம் கோரி மருத்துவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினி கிளினிக்குகள் கடந்த அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் 1,400 கிளினிக்குகள் , சென்னை மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் தலா 200 கிளினிக்குகள் மற்றும் 200 இடங்களில் நகரும் மினி கிளினிக்குகள் என மொத்தம் 2,000 மினி கிளினிக் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.

பிப்ரவரி மாதம் 2021, கடந்த அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளில் 1,800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். கொரோனா முதலாவது அலையில் அரசின் அழைப்பை ஏற்று பணிக்கு வந்தவர்கள் தான் இந்த மருத்துவர்கள். கொரோனா முதல் அலை முடிந்த நேரத்தில் மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்டனர்.

சில மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கிய போது பல மருத்துவர்கள் கொரோனா நோயாளிகள் அதிகம் இருந்த சென்னை மருத்துவமனைகளில் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின் டெங்கு பணி, வீடு வீடாக என்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா நோயாளிகளை வீட்டில் சென்று பராமரிப்பது, பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,அம்மா மினி கிளினிக்குகள் அவசியம் இல்லை என கூறி கடந்த டிசம்பர் மாதம் மினி கிளினிக்குகளை அரசு மூடிவிட்டது. கொரோனா மூன்றாவது அலையிலும் பணி செய்த இந்த மருத்துவர்களின் சேவை மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகள் களத்தில் அயராது உழைத்த தங்களை அரசின் வேறு திட்டங்களில் பணியமர்த்திக் கொள்ள வேண்டும் என மினி கிளினிக் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை மாற்று பணிகளில் பயன்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்த மருத்துவர்களுக்கான பணிவாய்ப்பு நிறைவு பெற உள்ளதால் தமிழக சுகாதாரத்துறை சார்பில் மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட 1,800 ஒப்பந்த மருத்துவர்கள் இன்று பணி பாதுகாப்புக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 478

0

0