மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த திமுக முயற்சி : அதிமுக குற்றச்சாட்டு

Author: kavin kumar
10 February 2022, 5:27 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியிடம் ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த திமுக, காங்கிரஸ் முயல்வதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு தரப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகளை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்றும், பள்ளியில் சீருடை அணிவது சம்பந்தமான,

ஆசிரியரின் உண்மை தன்மையற்ற சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் மாணவ,  மாணவியர்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியை திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும், மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதில் அரசு, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு இது தொடர்பாக துறைரீதியான விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக தொடர்ந்து நாடகம் நடத்தி வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 488

1

0