இந்தி திணிப்பு தொடர்பான விண்ணப்பம் போலியானது : மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு !

19 August 2020, 3:39 pm
Cbe Corporation -Updatenews360
Quick Share

கோவை : மாநகராட்சி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக தேர்வு செய்ய கூறவில்லை என்று மாநகராட்சி நிவாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் இந்தி மொழியை படிக்க விருப்பமா? என்று கேள்வி கேட்கப்பட்ட விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன. இந்த சூழலில், அந்த விண்ணப்ப படிவம் போலியானது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத் கூறுகையில், ”இந்த விண்ணப்ப படிவம் போலியானது. இதனை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் வழங்கி இருக்க வேண்டுமேயானால் இங்குள்ள 84 பள்ளிகளிலும் வழங்கியிருக்க வேண்டும். இது போன்ற விண்ணப்பங்கள் மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்பட இல்லை.” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி பள்ளியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இந்த விண்ணப்ப படிவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால், இது இந்தி மொழியை திணிப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. பொதுவாக மாணவர்களுடைய விவரங்கள், அவர்களது பின்புலம், விருப்பங்களை சேகரிக்க சில கேள்விகள் கேட்கப்படும். இது அவ்வாறான கேள்வியாக தான் நடைமுறையில் இருந்தது.

ஆனால், மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அந்த பழையை விண்ணப்பம் நடைமுறையிலேயே இல்லை. இதனை சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளி நிர்வாகம் தான் தவறுதலாக வழங்கியுள்ளதாக தெரிகிறது.

தற்போது வழங்கப்பட்டு வரும் விண்ணப்பங்களில் இவ்விதமான கேள்விகள் எதுவுமே இடம்பெறாத போது, அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான விண்ணப்பத்தை உறுதி செய்யாமல் அறிக்கைவிட்டுள்ளது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 31

0

0