டோல் கேட்டாக மாறிய ஆலம்பாடி செக் போஸ்ட்… ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டாய வசூல் ; வனத்துறையினர் அடாவடி..!!
Author: Babu Lakshmanan26 டிசம்பர் 2023, 5:01 மணி
ஒகேனக்கல் ஆலம்பாடி வன சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபடுவதாகவும், பகல் நேரங்களில் 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், இரவு நேரங்களில் 100 முதல் 500 ரூபாய் வசூலிப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் வனத்துறை சார்பில் செக் போஸ்ட் உள்ளது. ஒகேனக்கல் வனத்துறை வனப்பகுதியில் அதிக அளவில் மான், காட்டு பன்றிகள், யானை, சிறுத்தை மற்றும் குள்ளநரி செந்நாய் மற்றும் வன உயிரினங்கள் ஏராளமாக உள்ளது.
வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பது மற்றும் வனப்பகுதியில் உள்ள மரங்களை பாதுகாக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட வேண்டும். ஆனால் இந்த பணிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதை வனத்துறையினர் கையில் எடுத்துள்ளனர்.
பெங்களூரு, மைசூர், ஓசூர், பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆலம்படி வனச்சாலை வழியாக ஒகேனக்கல் வருகின்றனர். இங்கு ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார், தலைமையில் வனக்காப்பாளர்களை ஆலம்பாடி வன சோதனைச் சாவடியில் நியமித்து சுற்றுலா பயணிகளின் கார், வேன், பஸ், உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பகல் நேரங்களில் 50 முதல் 100 ரூபாய் வரையிலும், இரவு நேரங்களில் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் வசூல் செய்வதாக அவ் வழியாக வரும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்காக பென்னாகரம் வனசரகத்தில் வேலை செய்யும் வனக்காப்பாளர் சின்னசாமி, என்பவரை விடுமுறை நாட்களில் மட்டும் ஒகேனக்கல் வனச்சோதனைச் சாவடிக்கு மாற்றி வசூல் செய்கின்றனர். அவ்வாறு வசூலிக்கும் பணத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு பில் மற்றும் ரசித்து எதுவும் வழங்குவதில்லை என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வசூல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால், அதிக அளவில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த பூமரத்து பள்ளத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை சார்பில் தனி வசூல் நடக்கிறது. அதனை அடுத்து, 18 கிலோமீட்டர் தாண்டி தர்மபுரி மாவட்டம் வந்தால் ஆலம்பாடியிலும் வனத்துறை சார்பில் தனி வசூல் என ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
0
0