சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த கொள்ளை… வைரக்கல்லை விற்க நினைத்தவருக்கு நேர்ந்த கதி; 3 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 12:59 pm
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே சதுரங்க வேட்டை பாணியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விரகனூர் மகாராஜா நகர் ஆசிரியர் குடியிருப்பில் குடியிருந்து கொண்டு சிவகங்கை மாவட்டம் தத்தனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் அழகர் (42). இவர் முன்னாள் போலீஸ் ஆவார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியின் நகைகளை அடகு வைத்து 9.23 கேரட் எடையுள்ள Alexandrite Stone வகை வைரக்கல் வாங்கி வைத்திருந்தார். அதன் மதிப்பு சுமார் 7.5 லட்சம் ஆகும். அதன்பின்பு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு 6.4 கேரட் எடையுள்ள Alexandrite Stone-யை வாங்கினார். அதன் மதிப்பு சுமார் 2.5 லட்சம் ஆகும்.

மேற்படி Alexandrite Stoneகளை விற்க முடிவு செய்தார். இதற்காக மதுரை தெப்பகுளம் அடைக்கலம்பிள்ளை தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 33) மற்றும் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த அழகர்மணிகண்டன் (வயது 30) ஆகியோரை அணுகி தன்னிடம் இருக்கும் வைரக் கற்களை விற்பனை செய்து தருமாறு அழகர் கூறினார்.

இருவரும் மேற்படி Alexandrite Stone களை கோயம்புத்தூர் கொண்டு சென்று விற்று தருவதாக கூறினர். அவர்களை நம்பிய அழகர் தன்னிடம் இருக்கும் இரண்டு வைர கற்களை இவர்கள் மூலம் விற்க முடிவு செய்தார். அழகர் மணிகண்டன் கோயம்புத்துார் செல்வதற்கு அவருக்கு சொந்தமான காரை எடுத்து வருவதாக கூறினார்.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை 31ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அழகர் மணிகண்டனின் காரில் புரோக்கரான ராமகிருஷ்ணனை அழைத்து வந்தார். அழகரும், அவரது நண்பரான மதுரை K.K. நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரையும் அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினர். மேற்படி இரண்டு Alexandrite Stone கல்லை ஒரு மனிபர்சில் வைத்து அழகர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

இவர்கள் சென்ற கார் கோவை செல்வதற்காக திண்டுக்கல் பழனி ரோட்டில் திண்டுக்கல் பாலம்ராஜாக்காபட்டி பாலத்திற்கு முன்பு காலை 05.15 மணிக்கு வந்தபோது அழகர்மணிகண்டன் தனக்கு களைப்பாக இருப்பதாக கூறி காரை நிறுத்தினார்.

அப்போது, அவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 4 நபர்கள் இறங்கி வந்தனர். இறங்கி வந்த நபர்கள் காரின் அருகே வந்து ராமகிருஷ்ணனையும் அழகர் மணிகண்டனையும் அடித்து கீழே தள்ளி, கத்தியை காட்டி மிரட்டியவாறு காரை விட்டு சிறிது தூரம் இழுத்து சென்றார்கள்.

மற்ற இரண்டு பேர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த அழகரையும், கண்ணனையும் வெளியே இழுத்து போட்டு எங்கடா Alexandrite Stone-கல் என்று கேட்டு அதை எடுத்துக் கொடுங்கடா என மிரட்டினர்.

இவர்கள் எங்களிடம் எதுவும் இல்லை என்று கூறினர். அப்போது, மேற்படி நால்வரில் ஒருவன் கையில் வைத்திருந்த அருவாளை திருப்பிக்கொண்டு அழகரின் தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் மாறி மாறி அடித்தான். இதில் காயமடைந்த அழகர் இரத்தக்காயத்துடன் கீழே விழந்து விட்டார். மற்றொரு நபர் அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால், கண்ணனின் இடது நெற்றியில் ஓங்கி அடித்து கீழே தள்ளிவிட்டான்.

தொடர்ந்து, வந்த 4 நபர்களும் சேர்ந்து கீழே விழுந்த அழகர் மற்றும் கர்ணனிடம் இருவரின் பேண்ட் மற்றும் சட்டை பாக்கெட்டில் கைகளைவிட்டு தேடினார்கள். அப்போது ஒருவன் அழகரின் பேண்ட் பாக்கெட்டில் பர்சில் வைத்திருந்த மேற்படி இரண்டு Alexandrite Stone-கற்களை பறித்துக்கொண்டான்.

கற்களைக் கைப்பற்றிய 4 நபர்களும் அவர்கள் வந்த காரில் திண்டுக்கல் பழனி சாலையில் சென்று மறைந்தனர். அதன்பின்பு, காயம்பட்ட அழகர் மற்றும் கண்ணன் ஆகியோர் ராமகிருஷ்ணன் மற்றும் அழகர் மணிகண்டனையும் அழைத்துக் கொண்டு தாடிக்கொம்பு காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்து, அழகர் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்று விட்டனர்.

போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த பொழுது உடன் வந்தவர்களை அழைத்து வருமாறு கூறியபோது, ராமகிருஷ்ணன் மற்றும் அழகர்மணிகண்டனை தேடி பார்த்த போது அவர்கள் இருவரும் காரில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. எனவே, தாடிக்கொம்பு போலீசார் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் அழகர்மணிகண்டனும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் திண்டுக்கல் ரூரல் தனி படை போலீசார் அழகர் மற்றும் கர்ணன் கொடுத்த அடையாளத்தின் படியும் காரின் எண்களை வைத்தும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் காரில் தப்பிச் சென்ற ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன், மற்றொரு காரில் வந்த பரமகுடியைச் சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 23) ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச்சென்ற கார் டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் நடந்த இச் சம்பவத்தால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 251

0

0