பறக்கும் படையா..? அது எங்களுக்கு கிடையாது… திமுக கூட்டணி கட்சியின் கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு பணம், உணவு டோக்கன் தாராளம்..!!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 1:29 pm
Quick Share

திண்டுக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தாராளமாக வழங்கப்படும் பணம் மற்றும் உணவுக்கான டோக்கன் விநியோகத்தை பறக்கும் படையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளுங்கட்சியால திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டார்.

தற்போது மாவட்டம் முழுவதும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முதல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு சாலையில் உள்ள சரக்கு மண்டி குமாசாக்கள் மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திமுக துணை பொது செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் கூட்டத்திற்காக திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தாடிக்கொம்பு சாலை, நந்தவன ரோடு, மேற்கு கோவிந்தாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களில் இருந்து வரும் பெண்களை நிறுத்தி திமுக கட்சியினர் பணம் மற்றும் உணவு வழங்குவதற்காக டோக்கன் தாராளமாக வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை சுற்றி வருவதாக கூறி வரும் நிலையில், மாநகராட்சி மையப் பகுதியில் தாராளமாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்காக செயல்படுகிறதா..? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது.

Views: - 91

0

0