போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… ஊடகவியாளர் சங்கம் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 5:07 pm
Quick Share

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஊடகவியாளர் சங்கம், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை நுங்கம்பாக்கத்தில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுக நிர்வாகி சிற்றரசுவின் ஆதரவாளர்கள் நடத்தியுள்ள கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும்.

தாக்குதலுக்குள்ளான செந்தில் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவதுடன், திமுகவினர் பத்திரிகையாளர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள உத்தரவிட வேண்டும், எனக் கூறினார்.

Views: - 173

0

0