நாதக வேட்பாளருக்கு மிரட்டல்?…திமுக வேட்பாளரான அமைச்சரின் சகோதரர் மீது குற்றச்சாட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு..!!

Author: Rajesh
7 February 2022, 5:52 pm
Quick Share

தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி வேட்பாளரை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்ததாக அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரரும், 20வது வார்டும் வேட்பாளருமான திமுக உறுப்பினர் ஜெகன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்19ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 414 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 235 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 762 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உட்பட 147 சுயேச்சை வேட்பாளர்கள் என 475 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 39 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். தூத்துகுடி மாநகராட்சியில் உள்ள 20வது வார்டில் அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் வேட்பாளராக களம் இறங்குகிறார். தேர்தலுக்கு பிறகு அவருக்கே திமுக கட்சித் தலைமை மேயர் பொறுப்பை தர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி தினமான இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் 20வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கோபி மாடசாமி என்பவர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியின் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் கோபி மாடசாமி 20வது வார்டு வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அந்த கோபி மாடசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தது மட்டுமல்லாமல் தனது கைபேசியை அணைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ராஜசேகர் மற்றும் வார்டு தேர்தலில் போட்டியிடும் வேல்ராஜ் உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது வேட்பாளரை தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகன் மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஏற்கனவே தனக்கு அச்சுறுத்தல் வருவதாக கோபி மாடசாமி தெரிவித்ததாகவும் கூறிய அவர்கள் 20 ஆவது வார்டில் போட்டியிடும் ஜெகனின் வேட்பு மனுவினை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 476

0

0