மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி… திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 8:37 am
Quick Share

தேனியில் நடந்த மாரத்தான் போட்டியின் மூலம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி மாவட்டத்தில் தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு நுழைவுக் கட்டணமாக தலா ரூ.300 வசூலிக்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் போட்டியாளர்களுக்கு முறையான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும், பங்கேற்பாளர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்குவதிலும் குளறுபடி நடந்ததாகக் கூறி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளருமான ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 186

0

0