முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி… பிரதமரின் எண்ணத்தை மக்கள் முறியடிப்பார்கள் : துரை வைகோ…!!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 9:23 am
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற நினைப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக நாடாளுமன்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் மதுரையில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதிகளை வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது :- தமிழக பட்ஜெட் சிறந்த ஒரு பட்ஜெட்டாக விளங்குகிறது. ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்தில் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதிகளை அளிக்கவில்லை. சமூக நிதி, சமத்துவத்தை மையப்படுத்தி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை இருந்தாலும் கூட சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுகவுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக தரும் என எதிர்பார்க்கிறோம். 2 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை சீட்கள் கேட்டு இருக்கிறோம். திமுக அளிக்கும் தொகுதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவோம். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு நிதிகளை ஒதுக்கீடு செய்வதில்லை.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. மோடி பிரதமர் ஆனால் விலைவாசி குறைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி விலைவாசிகளை குறைக்கவில்லை. இராமர் கோவில் திறப்பை மையப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற நினைக்கிறார். மோடி மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். மோடியின் எண்ணத்தை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற நினைக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எதை வைத்து பாஜக சொல்கிறது என தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை பொறுத்து, இயக்கம் முடிவு எடுக்கும் பட்சத்தில் நான் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு நேரடி அரசியல் புதிதாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை, ஜனநாயகத்தை காக்க பழையபடி வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த கோரி விசிக தலைவர் திருமாவளவன் நடத்தும் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு, என கூறினார்

Views: - 152

0

0