சிலுவம்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி..!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 9:04 pm
Quick Share

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வழிபட்டார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் உள்ள சிலுவம்பாளையம் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ காசுமாரியம்மன், ஸ்ரீ அழகுநாச்சியம்மன் புடை சூழ காட்சி தரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கோவிலின் யாகசாலைக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஹோமம், பூஜைகள் நடைபெற்றது.

திங்கட்கிழமை அன்று காவிரியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு அழைத்து வருதல் மற்றும் முளைப்பாளிகை அழைத்து வந்து யாகசாலை பிரவேசம் செய்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து முதல் காலயாக பூஜைகளும், நேற்றைய தினம் அதிகாலை முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இன்றைய தினம் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவில் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மாயம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

முன்னதாக சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர் பெரியவர்களால், மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையில் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பத்து முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் இந்த கும்பாபிஷேக விழாவில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஓம் சக்தி பராசக்தி, ஓம் சக்தி பராசக்தி பக்தி பரவசத்துடன் கூறி அம்மனை வழிபட்டனர்.

கோபுரத்தின் மீது கும்பாபிஷேக தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Views: - 396

0

0