50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு… கோவையில் உருவாகும் புதிய தொழிற்பேட்டை : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 11:23 am
Minister Anbarasan - Updatenews360
Quick Share

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் அமைய உள்ள தொழில்பேட்டை மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில், 316.04 ஏக்கர் பரப்பளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை அமைய உள்ளது.
இதற்கான அடிக்கல்லை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நட்டு வைத்தார்.

கடந்த 30.8.2021 ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசின் பங்களிப்பாக ரூ10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, பயனாளிகள் பங்களிப்பு ரூ14 கோடியே, 60 லட்சம் சேர்த்து, ரூ24.61 கோடி மதிப்பீட்டில் தொழிற்பேட்டைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், தண்ணீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலைத்தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நிர்வாக அலுவலகம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள. செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், நேரடியாக இங்கு 15,000 பேருக்கும், மறைமுகமாக 30000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் இது. இதில், தொழில் மனைகள் 585 அமைய உள்ளது. ஆசியாவிலேயே சிறந்த தொழில்பேட்டையாக இந்த தொழில்பேட்டை உருவெடுக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேட்டியின்போது கூறுகையில், கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை அறிவிப்பு, 2011 இல் ஆட்சி மாறிய பிறகு இந்த திட்டம் அதிமுக வால் கைவிடப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்படுகிறது. 2010 ஆண்டு நில ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மேம்பாட்டு பணிகளுக்கு 24.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

316 ஏக்கர் பரப்பளவினை 535 தொழில் மனைகளாக பிரித்து தொழில்பேட்டை உறுப்பினர்கள் வசம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் செய்ய 24 கோடியே 60 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளின் பங்களிப்பு 14 கோடியே 60 லட்சம், அரசு பங்களிப்பு 10 கோடி. ஆசியாவிலயே மிகப்பெரிய தொழில் பூங்காவாக இது அமைகிறது.

நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 30,000 பேருக்கும் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சமீரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகர், கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தொழிற்பேட்டை நிர்வாக அலுவலர் சுகந்தி, கிட்டாம்பாளையம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 351

0

0