பாரம் தாளாமல் சரிந்து விழுந்த கரும்பு லாரி… அப்பளம் போல நொறுங்கிய கார்… 3 பேர் பலி ; திம்பம் சாலையில் சோகம்!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 12:17 pm
Quick Share

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரியிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இன்று காலை 7.30 மணி அளவில், 27வது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்த கரும்பு லாரி சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வளைவில் திரும்பும் பொழுது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த இடத்தில் வந்த கார் மீது கரும்பு லாரி சரிந்து விழுந்ததில், ஆறு பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள்.

மீட்பு பணியில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை பொதுமக்கள் படுகாயங்களுடன் மீட்டனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். கரும்புகளை அகற்றி, மேல் பகுதியை உடைத்து, அதில் சிக்கியிருந்த மற்ற மூன்று பேரை மீட்கும் போது, அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

விசாரணையில் சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கிணறு கிராமம் மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஆறு பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு ஈஸ்வரன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் பயணித்து வந்துள்ளனர். அப்பொழுது, 27வது கொண்டை ஊசியில் வளைவில் சத்தியமங்கலம் நோக்கி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ஆறு பேரும் மீது கரும்புகள் சரிந்து விழுந்து அமுக்கியது.

காரில் வந்த சத்தியமங்கலம் அருகே உள்ள மூலக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், சௌந்தர்ராஜ் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த மனோகர் ஆகிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

காரை ஓட்டி வந்த கஞ்சநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் செல்வம், நம்பியூரை சேர்ந்த குமார், இண்டியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சென்னையன் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

Views: - 117

0

0