கலைஞர் பெயரை வைத்து வைத்தே தமிழ்நாட்டை பட்டா போட்டுருவாங்க ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 3:39 pm
Quick Share

தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று கூறி, ஜல்லிக்கட்டு மைதானம், பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டப்படுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது வரை 20 தினங்கள் கடந்தும் மாப்பிள்ளையூரணி, சோட்டையன் தோப்பு, ஜே,ஜே நகர் உள்ளிட்ட நகரின் பல பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தாலும் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அப்பகுதயில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்க அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பெரியநாயகிபுரம் பகுதியில் அதிமுக மருத்துவ அணி சார்பில் மருத்துஅணி துணைச் செயலாளர் மருத்துவர் பொன்னரசு தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், சிறுநீரகம், இதயம், எலும்பு முறிவு, ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருந்துகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜு கூறியதாவது :- கொரோனா காலத்தில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிமுக அரசு ரூ.2500 வழங்கியது. அன்றைக்கு தற்போது உள்ள முதல்வர் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென கூறினார். ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சொன்ன முதல் அமைச்சர் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள.

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டம் மிகவும் பாதிப்புக்கு ஆகிய நிலையில், இப்போதைய முதல்வர் பொங்கல் தொகுப்பாக அவர் கூறியது போல், ஐந்தாயிரம் ரூபாய் தந்திருக்க வேண்டும் அல்லது கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 2500 ரூபாயாவது வழங்கி இருக்க வேண்டும். கண்துடைப்பாக ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உலக முதலீட்டாளர் மாநாடு இந்த மழை நேரத்தில் மக்கள் அல்லல் படும் சமயத்தில் தேவையில்லாத ஒன்று. முதன்முதலாக வெளிநாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து நடத்திக் காட்டியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எனக் கூறினார்.

புதிதாக திறக்கப்படும் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விட்டால் தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றி கருணாநிதி என்று வைக்க கூட வாய்ப்பு உள்ளது. மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தை கொண்டு வந்தது அதிமுக. ஆனால் இன்று எந்த ஒரு திட்டமிடலும் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் மேலிருந்து பார்த்தால் அவர்களின் கட்சி சின்னம் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் அரசியல் செய்வது என்பது ஒரு விசயம் இல்லாத செயல், இவர்களை தொடர்ந்து ஆள விட்டால், தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள், என குற்றம் சாட்டினார்.

Views: - 249

0

0