யாரு பெத்த மகராசனோ? மின் கட்டணம் உயர்ந்திருக்கும் நிலையில் பேட்டரி வாகனங்களுக்கு இலவச சார்ஜ்.. ஒர்க் ஷாப் ஓனருக்கு குவியும் பாராட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 1:19 pm
free battery charge - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்ந்திருக்கும் வேளையில் ஒர்க் ஷாப் உரிமையாளர் ஒருவர் பொது நலனுடன் பேட்டரி வண்டிக்கு இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என பேனர் அடித்து கடையின் முன் வைத்திருப்பது பொது மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் அம்மன் ஆட்டோ இன்ஜினியரிங் என்ற ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவர் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் வெளியூர் சென்று விட்டு வரும்பொழுது எதிர்பாராத விதமாக பைக்கில் சார்ஜ் குறைந்ததால் அருகே உள்ள கடையில் தயக்கத்துடன் கேட்டு சார்ஜ் போட்டதாகவும் கடைக்காரர் தன்னை சலித்துக் கொண்டு பார்த்ததாகவும் செந்தில்குமாரிடம் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட அவர் எலக்ட்ரிக் பைக்கில் செல்லும்போது சார்ஜ் இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தன்னுடைய ஒர்க் ஷாப் முன்பு இலவசமாக எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜ் போட்டு தரப்படும் என்ற அறிவிப்பு பேனரை கடையின் முன்பு வைத்துள்ளார்.

தற்போது மின்சார கட்டணம் தமிழகத்தில் அதிகரித்துள்ள இவ்வேளையிலும் மக்களின் பொது நலன் கருதி உதவி செய்யும் நோக்கோடு இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பை கண்ட அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்..

Views: - 510

0

0