பெண் பயணிகளை பார்த்து ஜொள்ளுவிட்ட ஓட்டுநர்… சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து விபத்து… தப்பி ஓடிய ஓட்டுநர்…

Author: Babu Lakshmanan
28 October 2022, 10:03 am
Quick Share

கரூர் அருகே நள்ளிரவில் சென்டர் மீடியனில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், அரசு பேருந்து ஓட்டுனர் மீது பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

கரூர் அடுத்த குட்டக்கடை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஈரோட்டில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று கரூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, குட்டக்கடை பகுதியில் திடீரென்று சாலையின் நடுவில் அமைந்துள்ள சென்டர் மீடியன் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக இடித்து நின்றது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அரசு பேருந்தை ஜெகதீஸ்வரன் என்ற நடத்துனருடன், பெருமாள்ராஜ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். பேருந்து விபத்து ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

பேருந்து விபத்து ஏற்படுத்தியதற்கு முழு காரணம் ஓட்டுநர் பெருமாள்ராஜ் என்று பயணிகள் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், அந்த ஓட்டுனர் பேருந்தினை இயக்கிய விதம் சரியில்லை எனவும், நீண்ட நேரம் சாலையைப் பார்த்து பேருந்தை இயக்காமல் பேருந்தில் பயணித்த பெண் பயணிகளை அவர் பார்த்து வந்ததாகவும் குற்றம் சாட்டினர்.

Views: - 543

0

0