ஓவர்டேக் செய்வதில் தகராறு.. நடுரோட்டில் சண்டையிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர்.. வழியில்லாமல் தவித்த ஆம்புலன்ஸ்!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 10:26 am
Quick Share

திண்டுக்கல் : செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல், டிராக்டர் ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் செயல் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேனிக்கும், மதுரையில் இருந்து கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆத்தூர், சித்தையன்கோட்டை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும், செம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து தான் அதிக அளவு பேருந்துகள் வந்து செல்லும். இந்த பேருந்து நிலையத்திலிருந்து அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.

அதேபோன்று, செம்பட்டி, சின்னாளப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் பூக்கள் செம்பட்டி பேருந்து நிலையம் வழியாக நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு எடுத்து செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் கூடலூரில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து, செம்பட்டி அருகே டிராக்டரை முந்தி செல்லும் போது, பேருந்து ஓட்டுநருக்கும் டிராக்டர் ஓட்டி சென்றவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை செம்பட்டி நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிராக்டர் ஓட்டுநரிடம் நடத்துனரும், ஓட்டுனரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். அப்பகுதியில் சென்ற ஆம்புலன்ஸ் வருவதைக் கூட பொருட்படுத்தாமல், அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் டிராக்டர் டிரைவரிடம் வாக்குவாதம் மற்றும் அடிதடியில் ஈடுபட்டது அப்பகுதியை சென்ற பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரசு பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது

Views: - 328

0

0