பிரசவ வார்டில் உதவியாளருக்கு அனுமதி மறுப்பு .. கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி… திடீரென கேட்ட குழந்தையின் சத்தம் ; இறுதியில் நடந்த சோகம்!

Author: Babu Lakshmanan
20 July 2023, 9:43 pm
Quick Share

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி பெண்ணுடன் உதவியாளர் உடனிருக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு சுக பிரசவம் ஏற்பட்டு குழந்தை வெஸ்டர்ன் டாய்லெட்டிலேயே விழுந்து மூர்ச்சை ஆகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 20 கர்ப்பிணி பெண்கள் பிரசத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.ஐந்து அடுக்கு மாடிக்கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவில் திறமையான டாக்டர்கள் இல்லை என்றும் செவிலியர்கள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை புதன்கிழமை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவரின் மனைவி முத்தமிழ் (வயது 22) என்ற இளம் கர்ப்பிணிப் பெண் பரிசோதனை செய்வதற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு தன் கணவருடன் வந்திருந்தார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முத்தமிழ்க்கு இன்றே டெலிவரி ஆக வாய்ப்புள்ளதாக தெரிவித்ததின் பேரில். முத்தமிழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சுக பிரசவம் ஆவதற்கு உண்டான லூபகேட்டும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் சிறுநீர் கழிக்க முத்தமிழ் கழிவறைக்கு சென்றிருக்கிறார். பெட்டை விட்டு இறங்கி சென்ற முத்தமிழை கண்காணிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தவறிவிட்டனர்.

வெஸ்டர்ன் டாய்லெட்டில் இயற்கை உபாதையை வெளியேற்ற முத்தமிழ் அமர்ந்திருந்த சமயத்தில் பிரசவ வலி அதிகமாகி ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்து டாய்லெட்டிலேயே விழுந்திருக்கிறது. இதனால் செய்வதறியாது திகைத்த முத்தமிழ் கத்தி கூச்சலிட்டதால் செவிலியர்கள் தாமதமாக வந்து என்ன ஏது, என கேட்ட பிறகு டாய்லெட்டில் விழுந்திருந்த குழந்தையை மீட்டனர்.

சரியான குழந்தை மருத்துவ நிபுணர்கள் இல்லாத காரணத்தினால், குழந்தை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்து 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்த நிலையில், அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 108 அவசர ஊர்தி சுமார் 2 மணி நேரம் காலதாமதம் ஆகி வந்துள்ளது.

இதனையெடுத்து அவசர ஊர்தி மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பச்சிளம் குழந்தை காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் ஐயம்பேட்டை பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையெடுத்து இறந்த பச்சிளம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.முதல் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு சுப பிரசவம் ஆகும் என மருத்துவர் கூறியிருந்த நிலையில், பிறந்து பச்சிளம் ஆண் குழந்தை இறந்ததால் கொதிப்படைந்த முத்தமிழின் கணவர் ஞானசேகர் உட்பட உறவினர்கள் அனைவரும் சேர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மிகுந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் வெற்றிசெல்வன் அவர்களிடம் பேச்சுவார்த்தியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் ஆதங்கத்தில் பேச அவர்களிடமும், அங்கிருந்தவர்களிடமும் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதனையெடுத்து குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல “அமரர் ஊர்தி உள்ளிட்ட எவ்வித அரசு உதவிகளும் தேவையில்லை” என கோபத்துடன் கூறி தங்களுடைய இருசக்கர வாகனத்திலேயே இறந்த பச்சிளம் குழந்தையை எடுத்து சென்றது மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்படும் நேரத்தில் கண்டிப்பாக உதவியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது மருத்துவ விதிகளில் ஒன்று என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மகப்பேறு மற்றும் மகளிர் நலப்பிரிவில் செக்யூரிட்டிகள் மற்றும் மருத்துவமனை பெண் ஊழியர்களில் சிலர் பணம் அளிக்கும் நபர்களை மட்டுமே வார்டுக்குள்ளே அனுமதிக்கின்றார்கள். அதனாலேயே கர்ப்பிணிப் பெண்களுடன் உதவியாளர்கள் உடனிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதும், இந்த பச்சிளம் குழந்தை இறப்பிற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே அனுப்பிரியா என்ற மருத்துவர் டியூட்டியில் இருக்கும் போது தான் ஃபோர்செப் எனப்படும் சுகப்பிரசவத்துக்கு மாற்றாக கருவிகளை வைத்து குழந்தையை பிரசவம் செய்யும் முறையில் குழந்தையின் தலை சேதம் ஆனது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

விடியா திமுக ஆட்சியில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுடைய சொந்த கிளினிக்கில் கவனம் செலுத்தி வருவதுதான் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

Views: - 353

0

0