கலவரத்தை உண்டாக்க முயற்சி… PFI, SDPI உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய இந்து அமைப்புகள் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 8:16 pm
Quick Share

தூத்துக்குடி : தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க துடிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் கலவரத்தை ஏற்படுத்தும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய வேண்டும், தூத்துக்குடியில் நேற்று இரவு பாஜக பிரமுகர் பஸ் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை கைது செய்ய வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில செயலாளர் வசந்த குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், தேசிய புலனாய்வு முகமை (NIA), பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட 15 மாநிலங்களில் சோதனை நடத்தி 45 பேர் கைது செய்ததில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக தமிழகம் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி நடத்தி வருகின்றனர். மண்டைக்காடு மற்றும் கோவை கலவரங்கள் போன்றவற்றை மீண்டும் நிகழ்த்திட முனைகிறார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஆகவே, தமிழக அரசு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க துடிக்கும் PFI (பிஎஃப்ஐ) (SDPI) எஸ்டிபிஐ அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்திட வேண்டும், மேலும், தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தேச விரோத செயலுக்கு ஆயுதப் பயிற்சி முகாம் நடத்துவது, ஆட்கள் சேர்ப்பது, கலவங்கள் நடத்தி நிதி உதவி செய்வது போன்ற பல்வேறு வழக்குகளை கொண்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ போன்ற அமைப்பதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் முன்பு பாஜக நிர்வாகிக்கு சொந்தமான விவேகம் பஸ் மீது வெடிகுண்டு வீசிய நபர்களை கைது செய்யப்படவில்லை, ஆகவே தூத்துக்குடி அமைதி பூங்காவாக இருந்த நகரத்தை அமைதியை கெடுக்கும் நோக்குடன் சுற்றி திரியும் தேச விரோதிகளை கைது செய்து, இந்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதிப்பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

Views: - 355

0

0