நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக தோற்கடிக்கப்படும் ; தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 5:09 pm
Quick Share

தமிழ்நாடு அரசு கல்லுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என கரூரில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கீழ்பவானி அணையிலிருந்து நீர்வளத்துறை நடத்தி வரும் தவறான நீர்வளத்துறை நிர்வாகம் காவிரி நதிநீர் தீர்ப்புக்கு புறம்பாக செயல்பட்டு வரும் நீர்வளத் துறையை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும்.

நடப்பாண்டில் கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்காவிட்டால் கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். தமிழ்நாடு அரசு கல்லுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.

கீழ்பவானி கால்வாய் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் முடிவடைகிறது. தமிழக நீர்வளத்துறை செயல்படுத்த உள்ள கான்கிரீட் கால்வாய் கட்டுமானத் திட்டத்தை கைவிட வேண்டும். மண் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக ஒருவேளை மாற்றினால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.

நடிகர் விஜய் பேராற்றல் கொண்டவர். சினிமாவில் அவர் ஒரு காலை தூக்கினால் 200 பேரும், இன்னொரு காலை தூக்கினால் 200 பேரும் பறக்கின்றனர். அவர் தமிழ்நாடு அரசியலில் களம் இறங்குவதற்கு பதிலாக, சீன எல்லையில் களம் இறங்க வேண்டும்.

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மது விற்பனை துறை அமைச்சர் போல் செயல்படுகிறார். டெட்ரா பேக்கில் மதுபான விற்பனையை கொண்டு வந்தால், தமிழகத்தில் அனைவரும் மதுபானம் அருந்தக்கூடிய நிலை ஏற்படும். அவர் ஒரு அமைச்சர் என்பதை மறந்து தெரியாமல் பேசி வருகிறார், எனக் கூறினார்.

Views: - 306

0

0