இழுத்து சாத்தப்பட்ட கதவுகள்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு ; கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 1:18 pm
Quick Share

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேற சொன்னதால் பரபரப்பு நிலவியது.

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவங்கியதும், திருக்குறள் வாசித்த பின்னர் மேயர் கவிதா கணேசன் செய்தியாளர்களை வெளியேற சொன்னார். கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் சக்திவேல் மைக்கை ஓங்கி, அதிமுக மாமன்ற உறுப்பினர்களை அடிக்க பாய்ந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளானது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கூட்டரங்கு அறையின் கதவுகள் இழுத்து சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல்வர் அறிவிப்பின்படி மாநகராட்சி மேயருக்கு 30 ஆயிரம் ரூபாயும், துணை மேயருக்கு 15 ஆயிரம் ரூபாயும், மாமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் மதிப்பூதியம் இன்று வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து மேயர் கவிதா கணேசன் தீர்மானம் நிறைவேற்றினார்.

Views: - 195

0

0