லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.. மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2023, 1:28 pm
Blind - Updatenews360
Quick Share

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இவருக்கு இரண்டு வயதாக இருந்த போது ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் பார்வை பாதிக்கப்பட்டு சுமார் 6 வயதில் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் இது குறித்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதிலும் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவரை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு கண்பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிறிது காலம் இருந்த அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அந்நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்து விட்டார். பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், வீட்டில் இருந்த மின் சாதனங்களை பழுது பார்த்து சரி செய்வது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை சரவணம்பட்டியில் குடியேறிய நிலையில் அவரது அக்கா ரேவதி இவரது ஆர்வத்தை பார்த்து அருகே உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துள்ளார்.

அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை வாங்கி எழுதுவது, கடையில் யாரும் இல்லாத போது பார்த்துக் கொள்வது என இருந்துள்ளார்.

அப்போது தனது மின் சாதன பொருட்களை பழுது பார்ப்பதில் உள்ள ஆர்வத்தை கடை உரிமையாளரிடம் கூறியதால் சிறு சிறு வேலைகளை அவர் கற்றுக்கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கவனம் செலுத்தி எலக்ரிக் பணிகளை கற்று கொண்ட சுரேஷ்குமார் ஒரு கட்டத்தில் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, வாசிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதன பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத்துவங்கினார்.

பிறகு வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இல்லாமல் மின் சாதன பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வரும் சுரேஷ்குமார் தனது வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை சமாளித்து வருகிறார்.

இவரது தன்னம்பிக்கைக்கு வழு சேர்க்கும் விதமாக அவரது அக்கா ரேவதியின் முயற்சியாக கவுண்டம்பாளையம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக தனது சொந்த கடையை நடத்தி வருகிறார். இவருக்கு அவரது நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.அப்பகுதியில் தன்னபிக்கைநாயகனாக வலம் வரும் சுரேஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தானும் தனது தாயாரும் தற்போது வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருவதாகவும் தங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கிய நிலையில் அதற்கு 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டி உள்ளதால், அதனை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 241

1

0