இடைத்தரகர்களை வைத்து மிரட்டும் மத்திய அரசு… 3 மாதங்களாக என்னையும் மிரட்டினார்கள் ; சபாநாயகர் அப்பாவு திடுக்கிடும் தகவல்!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 4:22 pm
Appavu - Updatenews360
Quick Share

தன்னை இடைத்தரகர்கள் மூன்று மாத காலமாக மிரட்டி வருகின்றனர் என தமிழக சட்டப பேரவைத் தலைவர் அப்பாவு குற்றச்சாற்று தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் 4வது தனியார் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நெல்லை வண்ணார்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசு
ஆண்டுக்கு மூன்று முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் இந்த முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறி வைத்து, அவர்களுக்கு முதலில் நூல் விடுவது பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசுவது குறிப்பிட்ட தொகையை வாங்குவது இப்படித்தான் நடந்து வருகிறது.

என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். ஒன்றிய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்ய சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் எண்ணை மாற்ற சொன்னார். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆறு வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் ஆளுநர் அவர்கள் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.
மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் இது மதச்சார்புடைய நாடு இந்தியா என பேசி வருகிறார், என்று கூறினார்.

தொடர்ந்து தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது :- அண்ணாமலை குறித்து அவரே இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறாரா..? தமிழக அரசின் நடவடிக்கையால் 60 சதவீதம் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் அவர் பேசுகையில், மின்வாரியத்தில் நிலக்கரி வழங்கியதில் 800 கோடி அளவிற்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 25 லட்சம் கோடி அளவிற்கு 500 முதல் 1000 பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடனை ரைட் ஆஃப் ( கடன் கணக்கை நீக்கியுள்ளது) செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை, என்றார்.

இறுதியாக அவர் பேசுகையில், என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கிறது, என கூறினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 266

0

0