கூட்டணிக்கு வேட்டு? திமுக அரசுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்.. கொந்தளித்த அறிவாலயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 5:20 pm
Vck Vs Dmk - Updatenews360
Quick Share

கூட்டணியில் சர்ச்சை? திமுக அரசுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்.. கொந்தளித்த அறிவாலயம்!!

நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், அமைச்சர் துரைமுருகனுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேசியிருப்பது கூட்டணியில் கலகத்தை உருவாக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல திமுக ஆட்சி அமைந்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு அளப்பறியது எனவும் விசிக இல்லையென்றால் திமுக ஆட்சி அமைத்திருப்பது கஷ்டம் என்கிற வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது. நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதிக்கு ஏன் இன்னும் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றும் அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மற்றும் இடைக்கால தடை பற்றியும் 2 நாட்களுக்கு முன்னர் தான் அமைச்சர் துரைமுருகன் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

”தமிழக அரசே தமிழக அரசே.. காலம் தாழ்த்தாதே காலம் தாழ்த்தாதே..” என விசிகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தான் துரைமுருகன் வகிக்கும் பதவிக்கும் அவரது அரசியல் அனுபவத்திற்கும் அழகு எனவும் விசிக நிர்வாகி பாவலன் பாடமும் எடுத்தார்.

இது வேலூர், திருப்பத்தூர் மாவட்ட திமுகவினரை உரசும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல விசிக மாநில நிர்வாகியின் பேச்சும், விசிக நடத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் திருமாவளவனுக்கு தெரியாமல் நடந்திருக்காது எனக் கருதும் திமுக, திமுக மீதான திருமாவின் கோபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் சூழலில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்த்தால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் உள்ளது.

நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் விசிக ஆரம்பம் முதலே உறுதியாக நின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 438

0

0