6 நாட்களாக மூடிக்கிடக்கும் உதகை மார்க்கெட் : நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் உண்ணாவிரதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 1:37 pm
Ooty Market - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை நகராட்சி மார்க்கெட் சீல் வைக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளதால் 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருப்பதாக உதகை மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கடந்த 25ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

இதையடுத்து வியாபாரிகள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகத்திடமும் வாடகையை தவணை முறையில் செலுத்த தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்க்கெட்டை திறக்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளனர்.

இதையடுத்து இன்று வரை மார்க்கெட் திறக்காமல் உள்ளதால் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த வியாபாரிகள் இன்று உதவி நகரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகள் வாடகை செலுத்தாமல் உள்ளதாக தவறான செய்தி இருந்து வருவதாகவும் இதுவரை பழைய வாடகையை செலுத்தி வரும் நிலையில் நூறு மடங்காக புதிய வாடகையை உயர்த்தி உள்ளதால் அதை நிர்ணயம் செய்து கொடுத்தால் புதிய முறை வாடகையும் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த 6 நாட்களாக மார்க்கெட் அடைக்கப்பட்டிருப்பதால் பழங்கள் காய்கறிகள் வீணாக அழுகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

எனவே தமிழக அரசானது உடனடியாக உதகை நகராட்சி மார்க்கெட் வாடகை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய வாடகை முறையை வரைமுறை படுத்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 141

0

0