சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்… தொழிற்சாலைகள் பாதிப்பு ; தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வருத்தம்!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 8:59 am
Quick Share

கோவை : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் சொந்த ஊருக்கு திரும்புவதால், தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக தென்னிந்திய நூற்பாலை கள் சங்கத்தினர் (சைமா) வருத்தம் தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும், தாக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், தங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுத்து செல்ல துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர்(சைமா) செய்தியாளர்களை சந்தித்தனர் . அப்போது அவர்கள் பேசியதாவது :- பஞ்சாலை தொழிற்சாலைகளில் 60% வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதனால், தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்சாலைகளில் அனைத்து விதமான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளது, எனக் கூறினார்.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என ஹிந்தி மொழியில் பேசி வட மாநிலத்தவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், வட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படுவதால், இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லவார்கள், என தெரிவித்தனர்.

Views: - 407

1

0