தமிழிசை சவுந்தரராஜனுக்கு துணை ஜனாதிபதி ஆசை… தேர்தலில் போட்டியிடுவதே இதுக்கு தான் ; அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 4:47 pm
Quick Share

தமிழகத்தில் ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப்பதில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது அவரவர்கள் தலையெழுத்து. அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார் என்று நினைத்திருக்க கூடும். அதுவும் நடக்காது, இந்திய கூட்டணி தான் மேலே ஆட்சி அமைக்கும். ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் மத்திய பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் கச்சத்தீவை மீட்போம் என்று ஏமாற்று வேலைகளை செய்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை அமைந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுடன் பேசி ஒரு மீனவர் கூட பாதிக்கப்படாமல் இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் முடியும். ஆனால் இது குறித்து அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார். மாநிலங்களில் இருந்து கொடுக்கும் வருவாயை தான் மத்திய அரசு திருப்பி வழங்குகிறது. அதற்காக அவர்கள் முதலாளியும் இல்லை, நாங்கள் தொழிலாளியும் இல்லை. எல்லாவற்றையும் நாங்கள் தான் செய்கிறோம் என்று கூறும் மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டியதுதானே. அதை ஏன் இன்னும் செய்யவில்லை? இவ்வாறு அவர் கூறினார்

Views: - 429

0

0