சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்… 63 வயது முதியவருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 4:41 pm
Quick Share

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் மேகநாதன் (வயது 63). இவரது மனைவி பாப்பாத்திக்கு மின்சாரம் பாய்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் சிறுமியை வீட்டு வேலைகள் செய்ய அடிக்கடி அழைத்துள்ளார்.

மேகநாதன் வயதானவர் என்பதால் சிறுமியின் தாய் வீட்டு வேலைகள் செய்ய அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2021ம் ஆண்டு வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதால் உன் அம்மாவிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் குடும்பம் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் சிறுமியை வழி மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த (21.06.2022) ம் தேதி அன்று சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மேகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இதனை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கிழ் ஆயுட்கால சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டுள்ளார்.

Views: - 438

0

0