சிறுமியின் உயிரைப் பிறத்த ஷவர்மா… மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி ; நாமக்கல்லில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 3:19 pm
Quick Share

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் சந்தை பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி (14) என்ற சிறுமி, தனது தாய் சுஜாதா (38), சகோதரர் பூபதி ஆகியோர் நேற்று முந்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று இவர்கள் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிப்படைந்துள்ளது.

இதை தொடர்ந்து, மூவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதன் பின் வீடு திரும்பிய இவர்கள், இன்று காலை சிறுமி கலையரசியை எழுப்பிய நிலையில், சிறுமி எழும்பாததால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதித்த போது, கலையரசி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கலையரசியின் தாய் மற்றும் சகோதார் தற்போது நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு சனிக்கிழமை பிறந்த நாளாகும். இதனையொட்டி, அவருடைய நண்பர்கள் 13 பேர் நாமக்கல் – பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் நேற்று மாலை சவர்மா என்ற உணவினை சாப்பிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும், பரமத்தி சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆய்வு செய்தார்.

மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும், கிச்சன் அறையை பார்வையிட்ட அவர், சிக்கன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்தை சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி சிக்கன்களை பினாயில் கொண்டு அழித்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Views: - 227

0

0