தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சு.. நெல்லை மேயர் பதவி தப்பியது : நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 1:39 pm
Mayor
Quick Share

தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சு.. நெல்லை மேயர் பதவி தப்பியது : நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 9ஆம் தேதி நெல்லை தனியார் ஹோட்டலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்கள் மற்றும் நெல்லை திமுக முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார். இந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர்.

அப்போது திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது கட்சி தலைமையின் உத்தரவை மீறுவது ஆகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த தயார் நிலையில் இருந்தனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலர் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனை மாநகராட்சி ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போதிய கோரம் இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது, மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்று கூறினார்.

திமுக கவுன்சிலர்கள் அனைவரும் இரு குழுக்களாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சித் தலைமை மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவுறுத்தலின் பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் சுற்றுலா சென்றுள்ளதாகத் தெரிகிறது. கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வராததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து, மேயர் சரவணனின் பதவி தப்பியுள்ளது.

Views: - 185

0

0