புத்தாண்டு கொண்டாட 1 மணி வரை மட்டுமே அனுமதி.. மெரினாவுக்கு போறீங்களா? சென்னை காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 9:59 pm
New Year
Quick Share

புத்தாண்டு கொண்டாட 1 மணி வரை மட்டுமே அனுமதி.. மெரினாவுக்கு போறீங்களா? சென்னை காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!!

சென்னை மாநகர கூடுதல் போலீஸ் ஆணையர்களான பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க், சுதாகர் ஆகியோர் இன்று வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் வார்மெமோரியல் முதல் லைட் ஹவுஸ் வரை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பெசன்ட்நகர் கடற்ரையில் 6வது அவன்யூ சாலைகள் மூடப்படும்.

கடற்கரை பகுதிகளில் மதுஅருந்த கூடாது. பீச்களில் மணற்பகுதிகளில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி. கடலில் இறங்க அனுமதி இல்லை. பீச்களில் மதுபானம் அருந்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை பாயும்.

பெண்கள் மீதான குற்றங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களில் வேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வீலிங் உள்ளிட்ட சாகசங்கள் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீலிங் மற்றும் அதிக வேகத்தில் செல்வோரை பதிவு செய்யும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகரில் மொத்தம் 6,471 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதிகள், ரெசார்ட், ஹோட்டல்கள் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நாளை இரவில் மூடப்படும். இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும்.

சென்னை நகர் முழுவதும் நாளை இரவில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர 1,500 ஊர்க்காவல் படையினர் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நகர் முழுவதும் சென்னை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன தணிக்கைகள் செய்யப்பட உள்ளது. 100 முக்கிய கோவில்கள், சர்ச்சுகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Views: - 250

0

0