தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலில் சிக்கிய காவலர் : பின்னணியில் பகீர் காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 2:53 pm
police
Quick Share

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலில் சிக்கிய காவலர் : பின்னணியில் பகீர் காரணம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி இரவு அவரை தொடர்ந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இது குறித்து முன்கூட்டியே அறிந்த செய்தியாளர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தும் அலட்சியத்தால் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இருப்பினும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன், பிரவீன்குமார், முகமது சபி, அரிகரன், ஜெயபிரவீன், பாலபாரதி, முகமது உமர், கருப்பசாமி, அப்துல் சலாம், தம்பி பிரபாகரன், சோமசுந்தரேஸ்வரன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சுபின் பிரபு (36) நேற்று முன்தினம் இரவு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் நேசபிரபுவை கூலிப்படை ஏவி போலீஸ்காரர் சுபின் பிரபு கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு காவலர் தான் சுபின்பிரபு. இவர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ஒரு ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டதாகவும், இது குறித்த செய்தியை நேசபிரபு டி.வி.யில் வெளியிட்டதாகவும், இதனால் சுபின் பிரபு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த போலீஸ்காரர் சுபின் பிரபு, கூலிப்படையினரை ஏவி அரிவாளால் வெட்டியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சுபின் பிரபு முன்ஜாமீன் பெற முயற்சித்துள்ளார். ஆனால் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் போலீசில் அவர் சரண் அடைந்துள்ளார் என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Views: - 92

0

0