திமுக கவுன்சிலர்களுக்குள் கமிஷன் பிரிப்பதில் பிரச்சனை…நகராட்சி தலைவரிடம் ‘கறார்’ பேரம்: வைரலான ஆடியோவில் திகைத்துப் போன மக்கள்..!!

Author: Rajesh
12 April 2022, 9:50 am
Quick Share

தேனி: அல்லிநகரம் நகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்கு கமிஷன் பிரிப்பதில் நகராட்சி தலைவரிடம் பெண் கவுன்சிலர் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அல்லிநகரம் நகராட்சி உள்ள 33 வார்டுகளில் 19 இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக 7, அமமுக – 2, காங்கிரஸ் – 2, சுயேச்சை – 2, பாஜக – 1 இடங்களை பிடித்தன. இதையடுத்து நகர்மன்றத் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கிய நிலையில், தலைமையின் அறிவிப்பை மீறி திமுக கவுன்சிலர் ரேணுப்ரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி

இதையடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக-வினர் தங்கள் பதவிகளை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டும், தனது பதவியை ரேணுப்ரியா ராஜினாமா செய்யவில்லை. இதனால், ரேணுப்ரியாவின் கணவரும், 20ஆவது வார்டு திமுக உறுப்பினரும், தேனி நகர திமுக செயலாளருமான பாலமுருகன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சியின் முதல் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்றத்தலைவர் ரேணுப்ரியா தலைமையில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட திமுக நகரப்பொறுப்பாளரும், 20வது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் உள்பட 8 திமுக கவுன்சிலர்கள், 2 அமமுக கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா

நகராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட 9 திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 2 சுயேச்சைகள், ஒரு பாஜக கவுன்சிலர் என மொத்தம் 23 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. நகராட்சியில் நடந்த முதல் கூட்டத்திலேயே திமுக கவுன்சிலர்கள் 10 பேர் கலந்து கொள்ளாதது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், முதல் கூட்டத்தில் 10 திமுக கவுன்சிலர்கள் ஏன் கலந்துகொள்ளாததற்கான காரணம் பற்றிய சுவாரஸ்யமான ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. கூட்டத்திற்கு அழைப்பதற்காக நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, 29வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரிவிடம் பேசிய ஆடியோ வெளியாகி தேனி மாவட்ட திமுக மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சந்திரகலா ஈஸ்வரி, ஏற்கனவே பேசியபடி எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும். அதுவரை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என எல்லா கவுன்சிலர்களும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். தேர்தலுக்கு முன்பே வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியதையும் கொடுக்கவில்லை. கமிஷன் பெர்சன்டேஜ் பிரிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் கமிஷன் குறித்து முன்கூட்டியே பேசவில்லை. செல்வம் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுப்பதாகக் கூறிவிட்டார் எனக் கூறுகிறார்.

அதற்கு பதிலளிக்கும் நகராட்சித் தலைவர் ரேணுப்ரியா, மொத்த பணமும் தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தரவேண்டிய பணத்தை தருகிறோம் எனச் சொல்லியிருந்தோம். பழைய டெண்டர்களுக்கு கமிஷன் கொடுக்க முடியாது. தேர்தலின்போது எல்லோருக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்தோம். ஆனால், எங்களின் பதவியே உறுதியில்லாமல் உள்ளது எனப் பேசியுள்ளார்.

நீண்ட காலமாக நகராட்சியில் கவுன்சிலர்களின்றி பல்வேறு திட்டப்பணிகள் முடங்கியிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்தநிலையில் வார்டுகளில் உள்ள குறைகள் அனைத்தும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பிக்கொண்டிருந்த தேனி மக்கள் இந்த ஆடியோவைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கமிஷன் பெர்சன்டேஜ் பிரிப்பதில் குறியாக இருக்கும் கவுன்சிலரின் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தேனி நகர்மன்றத் தலைவராக ரேணுப்ரியா பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கோடிக்கணக்கில் செலவு செய்து அவரது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதால், தேனி நகராட்சியில் அனைத்து மக்கள் பிரச்னைகளும் முழுமையாக முடங்கியுள்ளன. ஆனால், கவுன்சிலர்கள் பங்கு பிரிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.

மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாமல் தவிக்கும் தேனி நகராட்சியின் நிலையும், அடிப்படை வசதிகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தேனி நகர மக்களின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

Views: - 670

0

0