நகர்மன்ற உறுப்பினரை மதத்தை குறிப்பிட்டு பேசுவதா..? பாஜக உறுப்பினரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்…!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 5:15 pm
Quick Share

ராமநாதபுரம் நகரசபைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், கூட்டம் துவங்கியதுமே களேபரமும் துவங்கியது.

காரணம், ராமநாதபுரம் நகராட்சியில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கடந்த 4.9.23 அன்று பாரதிய ஜனதா கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேசிய ராமநாதபுரம் நகராட்சியின் 20வது வார்டு பா.ஜ.க நகர்மன்ற உறுப்பினர் குமார், நகர் மன்ற உறுப்பினர்களை நக்கி தின்னும் நாய்கள் என்றும், இரண்டு கவுன்சிலர்களை குறிப்பட்டு இசுலாமியர்கள் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் அன்றைய தினமே ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட நிலையில், அதன் பின்னர், நேற்றைய தினம் ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற நகர் மன்ற உறுப்பினர் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் குமாருக்கு ஏனைய மற்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

அப்போது, அவையில் வைக்கப்பட்ட குறிப்பு தீர்மானத்தின் மீது கேள்வி முன்வைக்க வந்த உறுப்பினர் குமாரை கேள்வி கேட்கவிடாமல், முதலில் அவையின் மாண்புக்கும், அவையில் உள்ள உறுப்பினர்களை பொதுவெளியில் கண்ணியமற்ற வார்த்தைகளை பேசியதற்கும், முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு கேள்வியை கேட்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக எழுந்து அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தான் சட்டரீதியாக எதிர்கொள்வதாகவும் உறுப்பினர் குமார் தெரிவிக்கவே, அதனை ஏற்க மறுத்ததோடு, மேற்கொண்டு அவர் கேள்வி கேட்க எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.அது மட்டுமின்றி அவர் பேசுவதற்கு அனுமதிக்க கூடாது என, நகர் மன்ற தலைவரை கேட்டுக்கொண்டனர்.

மீண்டும் மீண்டும் அவையில் வாக்குவாதம் முற்றியதை அறிந்த நகரமன்ற உறுப்பினர் கார்மேகம், தன்னுடைய அரசியல் வரலாற்றில் பல்வேறு கட்சியை எதிர்த்தும் கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் செய்திருப்பதாகவும், ஆனால் ஒருமுறை கூட தனிப்பட்ட விமர்சனம் செய்ததில்லை. எனவே, மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கூறிய நிலையில், அதற்கு அவர் மறுக்கவே, மீண்டும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக நாற்காலியை தட்டி கண்டனத்தில் ஈடுபட்டதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், நகர் மன்ற கூட்டத்தை பாதியிலேயே முடித்து வைத்தார் நகரமன்ற தலைவர் கார்மேகம்.

ஒரு வழியாக பிரச்சனை தற்காலிகமாக முடிந்தது என கூறி தேசிய கீதம் பாட அறிவுறுத்தப்பட்ட நிலையில், நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் இசக்கியம்மாள் மைக்கை பிடித்து தேசிய கீதம் பாடி டென்சன் ஹிப்பில் இருந்த எல்லோரையும் சிரிப்பு மோடுக்கு மாற்றினார்.

ஆரம்பம் முதலே தேசிய கீதத்தில் தடுமாறியபடியே பாடலை துவங்கிய அவர், அதன் பின்னர் அப்படியே நடந்தவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மனசுக்குள் சிரித்தவாறே, தேசிய கீதத்தில் வார்த்தைகளை கோட்டை விட்ட அவர், நடுநடுவே பாடுவதற்கு பதில் முனங்க ஆரம்பித்ததோடு, ‘ஜாஹே தவ ஜெய காதா’ என்பதற்கு பதில் ‘தாயே தவ சுவ ஆயா’ என பாடி அனைவரையும் திகைக்க வைத்தார்.

அப்பறமும் விடாமல் தட்டு தடுமாறி ஒரு வழியாக பாடி முடித்த உடனேயே, உடனிருந்த ஊழியர்களே அவரை கண்டித்தனர். தேசிய கீதத்தை கூட ஒழுங்கா பாட தெரியாமல், ‘ஆயா கூயானு பாடுறாங்கனு,’ சொல்லி கவுன்சிலர்கள் இருந்த டென்சனை மறந்து செல்லும் நிலைக்கு மாற்றியது அந்த சம்பவம்.

இறுதியாக, ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் எது தினம் மக்கள் குறைகளுக்கான எந்த விவாதமும் நடக்காமல் ஸ்வாஹா என முடிந்தது.

Views: - 330

0

0