ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்.! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.!!
1 August 2020, 7:06 pmகோவை : ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.
கொரோனா நோய் தொற்று பரவிய நாளிலிருந்து தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கக்கூடிய பணியானது அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்த 31 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை அதிகளவிலான பாதிப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் 14 நாட்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.
சுமார் 1கோடி மதிப்பீட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கும் இந்த நிவாரணம் பொருட்கள் வழங்கப்படுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். மேலும் முதல்கட்டமாக கோவை புதூர் பகுதியில் இருக்கக்கூடிய சின்னச்சாமி மண்டபத்தில் பாதிப்புக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு இந்த தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.
மேலும், தற்போது புதியத் தொற்று கண்டறியப்படுபவர்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கே.டி.வி.ஆர் பொறியியல் கல்லூரியில் 400 படுக்கை வசதிகள், பொள்ளாச்சி பி.ஏ கல்லூரியில் 200 படுக்கை வசதிகள், மேட்டுப்பாளையம் நஞ்சை லிங்கம்மாள் திருமண மண்டபத்தில் 100 படுக்கை வசதிகள், ஹிந்துஸ்தான் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள், கொடிசியா மையத்தில் கூடுதலாக 200 என 1000 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகளவிலான பரப்பளவையும், மக்கள் நெருக்கத்தையும் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்புகட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு இங்குள்ள மக்களின் ஒத்துழைப்பும், அதிகாரிகளின் அர்ப்பணிப்புள்ள பணியும்தான் என கூறிய அவர், மேலும், பொதுமக்கள் தொடர்ந்து அரசு வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றி கொரோனாவை கோவையிலிருந்து முற்றிலும் துரத்தியடித்து உலகிற்கே முன்மாதிரியாக மாறவேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
0
0