ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்த காவலர்கள் : கொட்டிய ரத்தம்..நொடியில் நடந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 2:46 pm
Police Chasing Acc - Updatenews360
Quick Share

ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய கொள்ளையர்கள்.. சேஸிங் செய்ய ஜீப்பில் விரட்டிய காவலர்கள் : நொடியில் நடந்த விபத்து!!

கோவை அருகே நள்ளிரவில் பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களை போலீசார் துரத்திச் சென்ற போது போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பிரிவு அருகே அவிநாசி சாலையில் நள்ளிரவில் சூலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது, நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது (ஜீப்) வாகனத்தில் அந்த பைக்கை துரத்திச் சென்றனர்.

போலீசார் துரத்துவதை பார்த்து அச்சமடைந்த பைக்கில் வந்த மர்ம நபர்கள் பைக் மற்றும் கையில் இருந்த உடமைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில் அதிவேகமாக வந்த காவல்துறை வாகனம் சாலையில் கிடந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் வலது பக்கமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு முழங்கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக காவலர்கள் காவல் ஆய்வாளரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் ஆய்வாளரை பரிசோதித்த மருத்துவர்கள் கை மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர்.

இதனிடையே மர்ம நபர்கள் விட்டுச் சென்ற பைக் மற்றும் உடமைகளை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டபோது, அதில் பட்டா கத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறி அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட முயற்சித்திருக்க கூடும் என சந்தேகித்துள்ள போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 2 தனிப் படைகள் அமைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 282

0

0